காலி கோட்டைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் அறவிடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலி கோட்டை சுதர்மாலய விகாரையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
காலி கோட்டைக்குள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 15 டொலர்களை வசூலிக்க காலி ஹெரிடேஜ் அறக்கட்டளை தீர்மானித்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக காலி கோட்டை வாசிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களும் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி நேற்று (25) பிற்பகல் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பிரதேசவாசிகள் மற்றும் வர்த்தகர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியதுடன் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என தெரிவித்தார்.