தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவிடம் இன்று (21) 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பிரமோத்ய விக்கிரமசிங்க மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று பிற்பகல் தெரிவித்தார்.
அந்த 5 மணி நேரத்தில் பிரமோத்ய விக்கிரமசிங்கவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி, பிரமோத்ய விக்கிரமசிங்க சோர்வாக இருந்த காரணத்தினால் மாலை 4.15 மணியளவில் வாக்குமூலப் பதிவு நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பிரமோத்ய விக்கிரமசிங்க இன்று காலை 11.15 மணியளவில் கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றங்கள் தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு வருகை தந்தார்.
விளையாட்டு குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயநாத் வனசிங்கவின் மேற்பார்வையின் கீழ், அந்த பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபுல் விதானகே தலைமையில் வாக்குமூலம் பெறப்பட்டது.