விசேட பாராளுமன்ற அமர்வுகள் இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும்.
அதேபோல் எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைப்பார்.
மேலும், 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், இதற்கமைய வரவு – செலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
நாளை 09ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும், கடந்த ஜூலை 20ஆம் திகதி, ஒக்டோபர் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகளே இவ்வாறு விவாதத்துக்கு உள்ளாக்கப்படவுள்ளன. இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடைபெறவுள்ளது.
நவம்பர் 10ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை 2021 நிதியாண்டுக்கான 2020ஆம் ஆண்டு 07ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
இதற்கமைய 08,09,10,11 ஆகிய தினங்களில் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு 2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பை (வரவு – செலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைப்பார்.
இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர டிசம்பர் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தினங்களிலும் வரவு -செலவுத்திட்ட விவாதம் நடைபெறும்.