புதிய சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் மருந்துக் கட்டணம் செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் இதில் இணைந்துள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அரச மருந்தக சட்ட கூட்டுத்தாபனத்தினால் பல்வேறு சப்ளையர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கு விசேட அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் பணத்தை ஒதுக்க தேசிய வரவு செலவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்குமாறு வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கான நிலுவையில் உள்ள சுகாதார கட்டணங்களை செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துகளை கொள்வனவு செய்தல் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துதல் போன்ற அத்தியாவசிய சுகாதார செலவுகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி பணம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, போலி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மருந்துகளை இறக்குமதி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.