கொஸ்லந்த, மிரியபெத்த, பழைய மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் இருபுறமும் அதிக ஆபத்துள்ள பகுதியிலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி, அதன் முன்னேற்ற அறிக்கையினை இன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி சில்வா நேற்று (18) உத்தரவிட்டிருந்தார்.
மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அதனையும் மீறி அங்கு தங்கியிருந்த பதினாறு மிரியபெத்த குடும்பங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொஸ்லந்த பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் டி. தினேஷ் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் (69335) புவனேஸ்வரன் நேற்று நீதிமன்றில் காரணங்களை விளக்கியிருந்தார்.
உண்மைகளை பரிசீலித்த பதில் நீதவான் கெனத் டி சில்வா, பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் 16 குடும்பங்களை உடனடியாக அகற்றி, இன்று நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவிக்குமாறு நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் எனவும், அவ்வாறு அங்கிருந்து வெளியேறாவிடின் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் பாரிய மண்சரிவுகளில் ஒன்றாக பதிவாகிய கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு மீண்டும் செயற்படுவதால் அபாயகரமான பிரதேசத்தில் இருந்து மக்களை வெளியேற்றுமாறு ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே. ஏ. ஜே. பிரியங்கனி தனக்கு காவல்துறையின் உதவி தேவை என்று அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் 16 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 200 பேர் காணாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.