நகர்ப்புறங்களில் மரங்களை நடும் போது தரமான மரக்கன்றுகளைப் பயன்படுத்துவதற்கான அமைப்பைத் தயாரிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பில் முறையான ஆய்வின் பின்னர் எதிர்கால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
புறநகர் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதை தடுப்பதற்கும், ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
புறநகர் பகுதிகளில் விழும் அபாயத்தில் உள்ள மரங்களை இனங்கண்டு, அவற்றால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு நீண்டகால தீர்வை தயாரிப்பதற்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதற்காகப் பயன்படுத்தும் தொழில்நுட்ப முறைகளை ஆய்வு செய்து, தாவரவியல் பூங்கா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவைப் பெறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.