சீன புவி இயற்பியல், அறிவியல் ஆய்வுக் கப்பலான “Shi Yan 6” என்ற சீனக் கப்பலுக்கு இந்த நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
குறித்த ஆய்வுக் கப்பலான “Shi Yan 6” உடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து தாம் விலக முடிவு செய்துள்ளதாக அண்மையில் ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
சீனக் கப்பலின் வருகை குறித்து அண்டை நாடான இந்தியா அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவை ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இதற்கமைய “Shi Yan 6” ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கையில் நங்கூரமிடுவதாக இலங்கை கடற்படையினர் முன்னர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும், இறுதி நேரத்தில் இலங்கை அதிகாரிகளால் இராஜதந்திர மட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி – “ஷி யான் 6” இலங்கைக்கு வருவதற்கு இதுவரை வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளதா?
பதில் : “ஒக்டோபரில் வர அனுமதி கேட்டார்கள். நவம்பரில் வரச் சொன்னோம். பிறகு மீண்டும் ஒக்டோபர் இறுதியில் வர அனுமதி கோரினார்கள். ஆனால் நாங்கள் இன்னும் முன்பிருந்த நிலையிலேயே இருக்கிறோம்.”
கேள்வி – ஒக்டோபரில் வரச் சொன்னால் நவம்பரில் வர முடியுமா?
பதில் : “சீனா மிகவும் முக்கியமானது. சீனாவுடன் பல மிக முக்கியமான உறவுகள் நமக்கு உள்ளன, ஆனால் நம் நாட்டில் செய்ய வேண்டிய விஷயங்களும் உள்ளன. அவற்றை எல்லாம் கவனத்திற் கொண்டு நாம் கப்பல் வர வேண்டிய காலத்தினை சொன்னோம். யாரோ வந்து போவது போல் இது மிகவும் எளிமையான பயணம் அல்ல.. அந்த நேரத்தில் இதை நாம் முழுமையாக எதிர்கொள்ள வேண்டும். நாம் தயாராக இருக்க வேண்டும்.அதற்கு நம் எல்லா வளங்களையும் பயன்படுத்தும் திறன் உள்ளது. நாட்டுக்கு எந்த நேரத்தில் வரலாம், வரக்கூடாது என்று நம்மால் தான் கூறமுடியும்..”