முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதியின் இராஜினாமா கடிதம் கடந்த வியாழன் அன்று இணையத்தில் பரப்பப்பட்டதாக Jurist இணையதளம் குறிப்பிடுகிறது.
மரண அச்சுறுத்தல்கள் மற்றும் தனது தொழில் வாழ்க்கை மீதான அதிக அழுத்தங்கள் காரணமாக தாம் வகிக்கும் அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கிய இராஜினாமா கடிதத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவை மாற்றுமாறு கடந்த மாதம் 21ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தம்மை அலுவலகத்திற்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்ததாக டி.சரவணராஜா குற்றஞ்சாட்டியதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பொது பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவரிடமிருந்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக டி.சரவணராஜா குறிப்பிட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் அதிகாரிகள் செயற்பட்டதாகவும், புலனாய்வுப் பிரிவினர் தம்மை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் டி.சரவணராஜா மேலும் குற்றம் சுமத்தியதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.