2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இன்று (29) பங்களாதேஷ் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று மூன்று பயிற்சி ஆட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில் முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி குவஹாட்டியில் வைத்து பங்களாதேஷை எதிர் கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு, போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணியானது 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 263 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க 64 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் தனன்ஞய டி சில்வாவும் அரைச்சதம் விளாசி 55 ஓட்டங்கள் பெற்றிருந்தார். பங்களாதேஷ் பந்துவீச்சில் மஹேதி ஹஸன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 264 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 42 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்து கொண்டது. பங்களாதேஷ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக களமிறங்கிய தன்ஷீட் ஹஸன் 84 ஓட்டங்கள் பெற்றதோடு, லிடன் தாஸ் 61 ஓட்டங்களையும் அணித்தலைவர் மெஹிதி ஹஸன் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கைப் பந்துவீச்சில் லஹிரு குமார, துனித் வெல்லாலகே மற்றும் துஷான் ஹேமன்த ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்த போதும் அது வீணாகியிருந்தது.
உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அடுத்ததாக இலங்கை ஆப்கானிஸ்தானை ஒக்டோபர் 03ஆம் திகதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.