இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, ’நாங்கள் மக்களிடம் இருந்து பெறப்போவதில்லை, மக்களிடம் இருந்து எடுக்கப் போகிறோம்’ என்றார்.
இதன்படி, இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் மீது அதிக வரிச்சுமை ஏற்படும் என நிதியமைச்சர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மல்வானையில் உள்ள சொகுசு வீடு தொடர்பான வழக்கில் நேற்று (01) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மல்வானையில் உள்ள சொகுசு வீடு, ஒப்பந்ததாரர் ஒருவரை பயன்படுத்தி பசில் ராஜபக்ஷ கொடுத்த பணத்தில் கட்டப்பட்டதாக வழக்கின் சாட்சியான முதித உபாலி ஜெயக்கொடி நேற்று (01) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்த முதித உபாலி ஜயக்கொடி, ஒப்பந்தக்காரரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஒப்பந்ததாரரிடம் பணத்தை வழங்கியபோது, அதற்கான ரசீதுகளும் கிடைத்ததாகவும், அவை தனது நிறுவனத்தின் ரசீதுகள் என்பதை ஏற்றுக்கொண்டதாகவும் சாட்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
தொம்பே மல்வான பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து அங்கு வீடு மற்றும் நீச்சல் தடாகம் அமைத்து அரச நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.