follow the truth

follow the truth

January, 26, 2025
HomeTOP1ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

Published on

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த சுபர் 4 போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 02 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் இரண்டாவது அணியாகவும் மாறுகின்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் முன்னதாக இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகியிருந்தது. மழை காரணமாக அணிக்கு 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது.

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாக இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்திருந்த இலங்கை அணி இரண்டு மாற்றங்களோடு களமிறங்கியது. அதன்படி கசுன் ராஜித, திமுத் கருணாரட்ன ஆகியோருக்குப் பதிலாக குசல் பெரேரா, ப்ரமோத் மதுசான் ஆகியோர் இலங்கை பதினொருவரில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, ப்ரமோத் மதுசான்

பாகிஸ்தான் XI

பகார் சமான், அசாட் சபீக், பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஹரிஸ், இப்திகார் அஹ்மட், சதாப் கான், சமான் கான், சஹீன் அப்ரிடி, மொஹமட் வஸீம், மொஹமட் நவாஸ்

பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் ஆரம்பத்தில் பகார் சமானின் விக்கெட்டினை இழந்து தடுமாறியது. ப்ரமோத் மதுசானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பகார் சமான் 04 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

எனினும் பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக அணித்தலைவர் பாபர் அசாம், அப்துல்லா சபீக் ஜோடி இணைந்ததோடு குறித்த ஜோடி இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 62 ஓட்டங்கள் வரை பகிர்ந்தது. பின்னர். பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டாக அதன் தலைவர் பாபர் அசாம் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் ஆரம்ப வீரர்களில் ஒருவராக இருந்த அப்துல்லா சபீக் தன்னுடைய கன்னி அரைச்சதத்தோடு பாகிஸ்தான் தரப்பினை தொடர்ந்து பலப்படுத்தினார். தொடர்ந்து அப்துல்லா சபீக்கின் விக்கெட் அவர் 52 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மதீஷ பதிரனவின் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 130 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அப்போது போட்டியில் மழையின் குறுக்கீடும் உருவானது. இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டதோடு பின்னர் ஆட்டம் அணிக்கு 42 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடர்ந்தது. தொடர்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிரடியாக துடுப்பாடியதோடு களத்தில் இருந்த மொஹமட் ரிஸ்வான், இப்திகார் அஹ்மட் ஜோடி பாகிஸ்தான் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை எடுத்தது.

பாகிஸ்தான் துடுப்பாட்டம் சார்பில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் தன்னுடைய 12ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 73 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் எடுத்தார். இப்திகார் அஹ்மட் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சு சார்பில் மதீஷ பதிரன 3 விக்கெட்டுக்களையும், ப்ரமோத் மதுசான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக டக்வெத் லூயிஸ் முறையில் நிர்ணயம் செய்யப்பட்ட 252 ஓட்டங்களை 42 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலன்க ஆகியோரது அபார ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை போட்டியின் இறுதிப் பந்தில் (அதாவது 42ஆவது ஓவரில்) த்ரில்லரான முறையில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றியினை இறுதிவரை களத்தில் நின்று உறுதி செய்த வீரர்களில் சரித் அசலன்க 47 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம் குசல் மெண்டிஸ் தன்னுடைய 24ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 87 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் சதீர சமரவிக்ரம பொறுப்பான ஆட்டத்தோடு 48 ஓட்டங்கள் பெற்றதோடு, மெண்டிஸ் உடன் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இறுதிக்கட்டத்தில் இலங்கை துடுப்பாட்டத்திற்கு அழுத்தம் உருவாக்கிய சஹீன் அப்ரிடி 02 விக்கெட்டுக்களையும், இப்திக்கார் அஹ்மட் 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் துடுப்பாட்டவீரரான குசல் மெண்டிஸ் தெரிவாகியிருந்தார். இப்போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை (17) இந்திய அணியுடன் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர...

மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து

காலி, இமதுவ, அங்குலுகஹ பகுதியில் இன்று (26) காலை மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று...

மோசமான காலநிலை – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான காலநிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணம்...