அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் இணைப்பதற்கான மத்தியஸ்த பணியை மேற்கொள்வதற்கு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்மொழியத் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசியல் பிரசாரத்தை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ சிறந்த மற்றும் ஒரே மத்தியஸ்தராக இருப்பதாகவும் எனவே இந்த வேலைகளை தாமதிக்காமல் துரிதப்படுத்த வேண்டும் எனவும் பொதுஜன பெரமுன எம்பிக்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைமைத்துவம் தற்போது உருவாகி வருவதாலும், அக்கட்சிக்கு புதிய மக்கள் ஈர்ப்பு உள்ளதாலும், குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மீண்டும் இணைத்துக் கொள்வதன் மூலம் கட்சியின் பொறிமுறைமை பலப்படுத்தப்படும் என இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதால் கட்சியின் பொறிமுறையை இப்போதிருந்தே தயார் செய்வது முக்கியம் எனவே பொதுஜன பெரமுன இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றனர்.
இது தவிர இந்த இரண்டு எம்.பி.க்களின் பேச்சுத்திறன் மற்றும் பேச்சு பாணி மற்றும் அவர்களது பிரச்சார நடவடிக்கைகளில் விருப்பமுள்ள பொதுஜன பெரமுன புதிய எம்.பி.க்கள் குழுவொன்றும் இருப்பதாக அறியமுடிகிறது.
இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களிடமும் அந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.
கோட்டாபய ராஜபக்ச அரசையும், அப்போது அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவையும் விமர்சித்து கொழும்பில் பொதுக்கூட்டம் நடத்தி அரசாங்கத்தை விமர்சித்ததற்காக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில எம்.பி.க்கள் அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.