இன்று(30) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அரசியல், வன்முறை மற்றும் போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்திருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
‘அவர்களை நினைவு கூறுவோம், அவர்களை மறக்க மாட்டோம் ‘ என்பதே இம்முறை தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, காணாமல் போதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும் கட்டாயமாக காணாமல் செய்யப்படுதல் என்பது தடை செய்யப்பட வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது எனவும் ஐ.நா வலியுறுத்துகின்றது.
இரண்டாம் உலகப்போரின் போது காணாமற்போன சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுவீடனின் Raoul Wallenberg இந்நாளில் பெரிதும் நினைவு கூரப்படுகின்றார்.
இலங்கையிலும் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வௌிப்படுத்துமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றுடன் 2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்மீனியா, பாகிஸ்தான், துருக்கி, பிரேசில், சிலி, உகண்டா, கொசோவா, செனகல் உள்ளிட்ட பல நாடுகளில் காணாமல் போதல் சம்பவங்களில் கணிசமாக இடம்பெற்றுள்ளன.
சக மனிதர்களை காணாமற்போகச் செய்வது போன்ற குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் எண்ணமாகும்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று(30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.