கனடாவை தலைமையிடமாகக் கொண்டு, MTFESL. MTFE SL Group என்ற நிறுவனம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பொது வைப்புத் தொகையாக சட்டவிரோதமான முறையில் சேகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (21) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த நிறுவனம் இலங்கையிலுள்ள பெருந்தொகையான மக்களிடம் பல கோடி ரூபாவை வசூலித்துள்ளதாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டு கம்பனிகள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்ஜன்ட் (23072) விஜித ராஜபக்ஷ நீதிமன்றில் தெரிவித்த போதிலும், அங்கும் நிறுவனத்தின் செயற்பாடுகள் சரியாகக் கூறப்படவில்லை.
பிரமிட் வகையிலான சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த நிறுவன தலைவர்கள் 05 பேரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு பயணத்தடையின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரியும் ஹோமாகம, பனாகொட, ஹைலெவல் வீதி, இல. 521/B இல் வசிக்கும் ஆர். டி. டி. துஷார ஜயவன்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் எதிர்பார்க்கப்படும் பிணை விண்ணப்பத்தையும் சமர்ப்பித்திருந்தார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதால், விண்ணப்பதாரருக்கு பிணை வழங்கப்படுமாயின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என சுட்டிக்காட்டிய பிரதான நீதவான், நிலுவையிலுள்ள பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.