கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகள் இடையே நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 18ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியானது 09 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
நேற்று (13) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாமிக்க கருணாரட்ன தலைமையிலான கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டது.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு வீரர்கள் பெதும் நிஸ்ஸங்கவின் அரைச்சத உதவியோடு 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்கள் எடுத்தனர்.
கொழும்பு அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க 38 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுக்க, நிபுன் தனன்ஞய 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியோடு 40 ஓட்டங்கள் பெற்றார்.
பி–லவ் கண்டி அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவர் வனிந்து ஹஸரங்க, இசுரு உதான மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 170 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பி–லவ் கண்டி அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் அணித்தலைவர் வனிந்து ஹஸரங்க, ஆசிப் அலி ஆகியோர் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் கைகொடுக்க வெற்றி இலக்கினை நெருங்கியது.
பின்னர் போட்டியின் இறுதி இரண்டு ஓவர்களுக்கும் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டு ஆட்டமானது சூடுபிடித்த நிலையில் பி–லவ் கண்டி அணியானது கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் அபார பந்துவீச்சினால் போட்டியின் இறுதி இரண்டு ஓவர்களிலும் 16 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்தது. இதனால் கண்டி பி–லவ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வி அடைந்தது.
பி–லவ் கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் போராடிய வனிந்து ஹஸரங்க 21 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் பெற்றிருக்க, ஆசிப் அலி 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்தார்.
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் மதீஷ பத்திரன மற்றும் ஜெப்ரி வன்டர்செய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார்.