ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயல்படுத்த நியமிக்கப்பட்ட செயலணி குறித்து தற்போது சமூகத்தின் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இதுகுறித்த கடிதங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று செயலணியில் உள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
செயலணியின் செயற்பாடுகள் குறித்தும் அங்கத்தவர்கள் குறித்தும் கேட்டபோது, தனக்கு இன்னமும் நியமனக் கடிதம் கூட கிடைக்கவில்லை என்றும், கடிதம் கிடைத்த பின்னரே ஊடங்களுக்கு இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் செயலணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒரு நாட்டின் சட்ட வரைவொன்று குறித்து சிபாரிசு செய்வதற்கு மதத் தலைவர்களை நியமித்துள்ளமையும், நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவர் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமையும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது,
செயலணியின் தலைமைப் பதவிக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளே இருக்கும் உறுப்பினர்களும் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பௌத்த தேரர்களும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.