லங்கா பிரீமியர் லீக் தொடரில் வனிந்து ஹசரங்கவின் அற்புதமான சகலதுறை ஆட்ட உதவியுடன் கோல் டைட்ட்ன்ஸ் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பி லவ் கண்டி அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 3ஆவது வெற்றியைப் பதிவு செய்த பி-லவ் கண்டி அணி, புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (08) மாலை நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் பி-லவ் கண்டி – கோல் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கோல் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் ஹாரிஸ் 14 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த பக்கர் ஜமான் – அஞ்செலோ மெதிவ்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் இருவரும் அரைச் சதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்கர் ஜமான் 45 ஓட்டங்களுடனும், மெதிவ்ஸ் 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய வனிந்து ஹசரங்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதம் கடந்ததுடன், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களை விளாசினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பி-லவ் கண்டி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைக் குவித்தது. இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில் 200 ஓட்டங்களைக் குவித்த முதல் அணியாக கண்டி மாறியதுடன், அணியொன்றினால் பதிவு செய்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது இடம்பிடித்தது.
கோல் டைட்டன்ஸ் தரப்பில் லஹிரு சமரகோன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.
அதனையடுத்து 204 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கோல் டைட்டன்ஸ் அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடனே விளையாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லசித் குரூஸ்புள்ளேயும், ஷெவோன் டேனியலும் களமிறங்கினர். ஷெவோன் முஜிபுர் ரஹ்மானின் முதல் ஓவரிலேயே டக்அவுட் ஆகி வெளியேற, பானுக ராஜபக்ஷ 5 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து டிம் சைபேர்ட் ஒரு ஓட்டத்தையும், லசித் குரூஸ்புள்ளே 27 ஓட்டங்களையும் எடுத்து ஏமாற்றமளித்தனர். மீண்டும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றிய அணித் தலைவர் தசுன் ஷானக ஒரு ஓட்டத்தையும், சகிப் அல் ஹசன் 11 ஓட்டங்களையும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 8.1 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து கோல் டைட்டன்ஸ் அணி தடுமாறியது.
எனினும், பின்வரிசையில் வந்த லஹிரு சமரகோன் 25 பந்துகளில் 36 ஓட்டங்களையும், அஷான் பிரியன்ஜன் 23 பந்துகளில் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்து வலுச்சேர்த்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கோல் டைட்டன்ஸ் அணி, 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் பி-லவ் கண்டி அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கண்டி அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க 3.4 ஓவர்களில் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இப்போட்டியில் 27 பந்துகளில் 64 ஓட்டங்களையும், 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்திய பி-லவ் கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க போட்டியின் ஆட்டநாயகானாத் தெரிவானார்.
முன்னதாக கொழும்பில் நடைபெற்ற முதலிரெண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பி-லவ் கண்டி அணி, பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், கோல் டைட்டன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.