சீனா மற்றும் தாய்லாந்து பிரஜைகள் இலங்கையில் மிகக் குறைந்த விலையில் இரத்தினக் கற்களை கொள்வனவு செய்வதற்கு சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்துவதால் அரசாங்கம் எதிர்பார்த்த வரியைப் பெறுவதில்லை என சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்;றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்தது.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தி நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கலந்துரையாடப்பட்டது.
மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் இரத்தினக்கல் மீது விதிக்கப்படும் 2.5% சமூகப் பாதுகாப்பு வரியை விடுவிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த நிவாரணம் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் நிதியமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
தற்போது இரத்தினக்கல் தொழிற்துறை மீதான வெளிநாட்டுப் பிரஜைகளின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் குழுவில் தெரிவித்ததுடன், அதற்கான கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
தமது வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் இலங்கையின் வங்கியொன்றை சீனாவில் ஸ்தாபிப்பது அல்லது சீன வங்கியொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தகர்களின் முன்மொழிவு தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
2018 ஆம் ஆண்டு முதல் “Bank of China” வங்கி இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும், தற்பொழுது இலங்கை முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கையின் வங்கியொன்றை சீனவில் ஸ்தாபிப்பது சிரமமானது என இதன்போது இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.