டெஸ்ட் போட்டிகளில் அண்மையில் ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்ற இங்கிலாந்தின் சகலதுறைவீரரான மொயின் அலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2021ஆம் ஆண்டிலேயே ஓய்வு பெற்ற போதும், இங்கிலாந்து டெஸ்ட் அணிப் பயிற்சியாளர் பிரன்டண் மெக்கலம் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த ஓய்வு அறிவிப்பினை மீளப் பெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி டெஸ்ட் போட்டிகளில் மீள விளையாடத் தொடங்கிய மொயின் அலி இந்த ஆண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் ஜேக் லீச்சின் பிரதியீடாக இங்கிலாந்து குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்ததோடு, ஆஷஸ் டெஸ்ட் தொடரினை இங்கிலாந்து 2-2 என சமநிலை செய்வதற்கும் பங்களிப்புச் செய்திருந்தார். இதில் மொயின் அலி நேற்று (31) ஓவல் மைதானத்தில் நிறைவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 03 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே தான் வெற்றி பெறக் காரணமாக ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டி, அதாவது மொயின் அலியின் 68ஆவது டெஸ்ட் போட்டி அவரின் இறுதி டெஸ்ட் போட்டி என மொயின் அலி குறிப்பிட்டிருக்கின்றார்.
“மீண்டும் ஸ்டோக்ஸ் எனக்கு (டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ஆடுவதற்கு வருமாறு) செய்தி அனுப்பினால் அந்த செய்தியினை நான் அழித்து விடுவேன். எனக்கு இத்துடன் அனைத்தும் நிறைவடைந்திருக்கின்றது. நான் இதனை இரசித்திருப்பதோடு, இதனை நிறைவு செய்தது சிறப்பாக இருக்கின்றது.”
மொயின் அலியின் தனது மீள்வருகையின் பின்னர் 04 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதோடு ஒரு அரைச்சதம் (54) அடங்கலாக மொத்தமாக 9 விக்கெட்டுக்களுடன் 180 ஓட்டங்களை குவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.