சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களினால் நேற்று (ஜூலை 19) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விமான நிலையங்களுக்கிடையிலான நிறுவன ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் சமகி ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக சுமார் 3,000 உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.டி.எஸ்.பிரியந்த கூறுகையில், விமான நிலைய ஊழியர்கள் கடைசியாக 2018ஆம் ஆண்டு சம்பள உயர்வைப் பெற்றதாகவும், சேவை அரசியலமைப்பின்படி விமான நிலைய ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
எனவே, அனைத்து சம்பள நிலைகளிலும் உள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 33,000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக, விமானங்கள் அல்லது விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் எந்தவித இடையூறுகளோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார்.