சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் ஆராய ஏழு பேர் கொண்ட குழுவொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் தேதுனு டயஸ் அதன் தலைவராக செயற்படுகிறார்.
குழுவின் அறிக்கை 3 வாரங்களுக்குள் அளிக்கப்படும்.
அண்மைய நாட்களில், இந்த நாட்டில் பல தடுப்பூசிகள் போடப்பட்ட பின்னர் பலியாகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பண்டுவஸ்நுவர யுவதியின் மரணம் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரின் மரணம் மிக நெருக்கமான சம்பவங்களாகும்.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் அவ்வப்போது 64 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகளை அகற்றி அல்லது தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்பட்டது.