ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் அந்தத் தாக்குதலுக்கு கண்டனங்களைப் பதிவு செய்தன. மேலும் இந்தியாவுக்கு தங்களின் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டன.
இந்தத் தாக்குதலுக்கு எதிராக சீனாவும் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலும், தீவிரவாதத்திற்கு சீனா எப்போதும் எதிராக இருக்கும் என்றும் கூறியது.
நிபுணர்களின் கூற்றுப்படி தற்போது நிலவி வரும் உலக அரசியல் சூழலில், இந்த விவகாரத்தில் இருந்து சீனா விலகியே இருக்கும். சீனா, பாகிஸ்தான் இடையிலான நெருக்கம் சமீபத்தில் அதிகரித்து வந்தது. மேலும் இந்தியாவுடனான சீனாவின் எல்லைப் பிரச்னையும் பேசுபொருளாக இருந்தது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியபோது, கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கே அமெரிக்கா ஆதரவாக இருந்தது. 1971ஆம் ஆண்டு போரின் போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவளித்தது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது 26 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயம் அடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள்.
தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடக பக்கத்தில், “காஷ்மீரில் இருந்து வருத்தமளிக்கும் செய்தி வந்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய மக்களுக்கு முழுமையான ஆதரவையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறினார்.
தாக்குதல் நடந்தபோது, அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன் இரங்கல்களைத் தெரிவித்தார்.
