சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கை வீட்டுக்காவலில் வைக்க சூடான் இராணுவத்தினா் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சூடான் நாட்டின் இடைக்கால அரசைச் சார்ந்த பல உறுப்பினர்களும், குடிமை அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை அதிகாலை, அடையாளம் தெரியாத இராணுவத்தினர், பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கையும், குறைந்தபட்சம் நான்கு அமைச்சர்களையும் கைது செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
ஜனநாயக ஆட்சிக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டில் நீண்டகாலமாக ஆட்சிபுரிந்த ஒமர்-அல்-பஷீரின் ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட பின்னர், ராணுவத்தினருக்கும் குடிமை அரசின் தலைவர்களுக்கும் மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தலைவர்களின் கைதுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை எனவும் ஃபேஸ்புக்கில் தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கைது கூட்டு இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகரம் முழுவதும் ராணுவ மற்றும் துணை இராணுவப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.