இந்த நாட்டில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட 4எம்எம்சி என்ற போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் அளவு 115 கிராம்.
இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர், கோடீஸ்வர வர்த்தகரின் மகன் மற்றும் மற்றுமொரு நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் கடத்தல் மாலைதீவு மற்றும் டுபாயில் இருந்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மொரட்டுவை, சமன்புர பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று மாடி கொண்ட சொகுசு வீடொன்றில் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் படி, இலங்கையில் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் விநியோக முகவரான மொரட்டுவ சமன்புர கோடீஸ்வர வர்த்தகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 115 கிராம் இனந்தெரியாத குறிப்பிட்ட போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில், நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த போதைப்பொருள் கடத்தலின் வேர்கள் அம்பலமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம் இலங்கைக்கு படகுகள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்யும் போதைப்பொருள் வலையமைப்பின் மூளையாக விளங்கும் தெஹிவளை அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலதிக தகவல்களை வெளிக்கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோசடியை விநியோகிப்பதற்கு உதவிய தெஹிவளை ஆண்டர்சன் வீதியைச் சேர்ந்த ஒருவரும் 20 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குறிப்பிட்ட போதைப்பொருட்கள் பொம்மைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டு டுபாயில் இருந்து விமான அஞ்சல் மற்றும் கூரியர் சேவைகள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மொரட்டுவை, சமன்புரவில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொருட்களை ஒப்படைத்த பின்னர், அவற்றை மீண்டும் பிரித்து பொம்மைகளில் பொதி செய்து, தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் உள்ள பிரதான போதை வர்த்தகரின் கைக்கு செல்ல அவை மீள் ஏற்றுமதி செய்வதற்காக ஒப்படைத்துள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுதவிர, இரவு விடுதிகளுக்கு அடிமையான செல்வந்தர்கள் மத்தியில் இந்த இனந்தெரியாத போதைப்பொருள் பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை மற்றும் மொரட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.