இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பாரிய பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதைக்காகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுதல், சில நிபுணர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுதல், அத்தோடு சமீபத்தில் அரசு வெளியிட்ட சுற்றறிக்கை பிரகாரம் ஒய்வு பெரும் வயது 60 என அறிவிக்கப்பட்டமை என்பன இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக உள்ளன.
2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 விஷேட மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இடமாறுதல் பட்டியலின்படி, இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்படவேண்டியுள்ளது.
அதிகாரிகள் உடனடியாகச் செயல்படத் தவறினால், அடுத்த ஆண்டுக்குள் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டும் என்று இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது சுமார் 2,007 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர், இந்த எண்ணிக்கை பொது மக்களின் மருத்துவத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தோடு 60 முதல் 63 வயதுக்குட்பட்ட 300 மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் உடனடி ஓய்வு பெறுவார்கள் என்பது இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் உள்ள 18 இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களில் ஒன்பது பேர் சேவையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது, இதனால் நாட்டில் உள்ள பல இருதய அறுவை சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயம் உள்ளது.
இதய சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பணயம் வைத்து கொழும்பு, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில சிறப்புப் பிரிவுகளும் இதில் அடங்கும். மேலும், 375 மருத்துவ நிபுணர்கள் தொழில்முறை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளதோடு சிலர் இதில் பல்கலைக்கழகங்களுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஓய்வு பெறும் வயது சலுகையை 60லிருந்து 63 ஆக மாற்றுவது நியாயமற்றது என 176 சிறப்பு மருத்துவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் சில மருத்துவர்கள் இந்த தீர்ப்புக்கு ஆதரவாககவும் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 63 வயதுக்கு மேற்பட்ட சுமார் 50 சிறப்பு மருத்துவர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அதிகாரிகள் வாய் மொழி மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக “டெய்லி மிரர்” செய்தி வெளியிட்டுள்ளது.