கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PickMe மற்றும் Uber போன்ற தனியார் வாடகைக் கார்களின் சேவைகள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் சிறிய அளவிலான வாடகைக் கார் சேவைகளின் அவல நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் 2000 இக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடகை வாகனங்கள் சேவையில் உள்ளதாகவும், இந்த வாடகை வாகன சேவையில், 6 சங்கங்களில் 1057 பேரும், டெண்டர் முறையின் பிரகாரம் கவுண்டர்கள் மூலம் கிட்டத்தட்ட 1000 பேர் வாடகை வாகன சேவை மற்றும் வெளிநாட்டினர் போக்குவரத்து சேவையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் விமான நிலையங்களுக்குப் பொறுப்பான அமைச்சர், இத்தகைய சேவை இருந்த போதிலும் Uber மற்றும் Pick Me சேவைகளை இணைக்க முடிவு செய்துள்ளார். இதனால் நீண்ட காலமாக வாடகை சேவையை பயன்படுத்தி வரும் தரப்புக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அண்மையில் வாடகை வாகன சேவைகள் சங்கங்களின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவைச் சந்தித்து இந்த அநீதி குறித்துத் தெரிவித்ததன் பிற்பாடே அவர் இவ்விவகாரம் குறித்து இன்று(21) பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
கிடைக்கப்பெறும் தகவலின் பிரகாரம், எந்தவொரு கொள்முதல் முறையும் இல்லாமல் இந்த புதிய அனுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டில் கொரோனாவின் பரவல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாடகை வாகனங்களின் பயண எண்ணிக்கை கூட குறைந்துள்ளதாகவும், அமைச்சரின் இவ்வாறான செயலை அனுமதிக்க முடியாது எனவும், இது வாடகை வாகன சாரதிகளுக்கு அநீதி இழைப்பதானதாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்களும் கூட விமான நிலையத்திற்குள் காட்சிப்படுத்தப்படுவதாகவும், இதனால் சுமார் 2000 வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலையிழந்து குடும்பமும் நிர்க்கதிக்காளாகியுள்ளதாகவும், புதிய எண்ணக்கருக்களை அமுல்படுத்த வரும் போது எந்தத் தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையில் அது மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.