ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ள கம்பஹா புதிய மாவட்ட செயலக கட்டிடத்தின் நினைவுப் பலகை மற்றும் அழைப்பிதழ் காரணமாக அரசியல் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
நினைவுப் பலகை மற்றும் கட்டிட திறப்பு விழா அழைப்பிதழில் ஜனாதிபதியின் பெயரை மாத்திரம் குறிப்பிடுமாறு கம்பஹா மாவட்ட செயலாளருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அறிந்த கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அமைச்சர் ஒருவர் கடந்த புதன்கிழமை திடீரென பொது நிர்வாக அமைச்சுக்கு வந்து நினைவுப் பலகையில் தனது பெயரைச் சூட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார்.
அதனை உடனடியாக செய்வதற்கு அமைச்சு கடுமையாக உழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பது மாடிகளைக் கொண்ட இந்த கம்பஹா புதிய மாவட்டச் செயலகக் கட்டிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
இக்கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இம்மாத இறுதியில் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.