ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கடந்த சில நாட்களாக சர்வதேச நிதியத்தில் இருந்து 300 மில்லியன் டொலர் கடனை நாடு பெற்றுள்ளதுடன், பசில் ராஜபக்ச அமைச்சராக இருந்து இந்தியாவிடமிருந்து பெற்ற கடனுதவியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இந்த நாட்டை நடத்தி வருகின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் வாக்குகளினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட போதிலும், பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் அரசியல் ரீதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படவில்லை என பொதுஜன பெரமுனவின் செயலாளர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை முன்னிறுத்துவதையே இலட்சியமாகக் கொண்டுள்ளதாகவும், விரல் சூப்பக்கூடிய ஒரு சிலரே அதற்கு எதிராக இருப்பதாகவும் செயலாளர் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் 69 இலட்சம் மக்களின் ஆணையைக் கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்தமையே ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும் என்ற எமது கோரிக்கை இன்னமும் செல்லுபடியாகும். ஆனால் கட்சி என்ற ரீதியில் பதவிகளுக்காக பிச்சை எடுக்க நாங்கள் தயாரில்லை… என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பும் உரிமையும் ஜனாதிபதிக்கு இருப்பதால், இந்த அமைச்சுப் பதவிகளை வழங்குவதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும், எனினும் பொஹொட்டுவிலுள்ள பல மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.