நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவி விலக்க வேண்டும் என நாம் யோசனை ஒன்றினை கொண்டு வந்தோம் இப்போது யார் யாரெல்லாம் மனம் மாறி உள்ளார்களோ தெரியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் (06) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
“.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்று ஒரு ஒழுக்கக் கோவை உள்ளது. அதில் கட்டாயம் மக்களின் நம்பிக்கை என்பபது முக்கியமானது. நாம் அண்மையில் இடம்பெற்ற வர்த்தக குழு கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக தீர்மானம் ஒன்றினை எடுத்தோம். இப்போது அவர்கள் மனம் மாறி விட்டார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது.
இந்த பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் களங்கம் விளைவித்த அலி சப்ரியை பதவி நீக்கம் செய்யும் யோசனை ஒன்றில் கையொப்பம் இடுவோம் என நாம் தீர்மானித்தோம். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. இதுவா சிஸ்டம் சேன்ஜ்? எனக் கேட்கிறேன்.
கடந்த 3ம் திகதியன்று, இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழு எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்தத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
அவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பத்திரிக்கை அறிக்கையிடலில் அண்மையில் கைதான நபருக்கு 70 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாட்டில் எவ்வாறு இரு சாட்டல் அமுலில் இருக்க முடியும் என நாம் கேள்வி எழுப்புகிறோம்.
பிரதமரின் அவாதனத்திற்கு இதனை கொண்டு வருகிறேன், ஒரே குற்றத்திற்கு இரு வேறு அபராதங்கள். இதற்கு முறையான தீர்வு வேண்டும்…” எனத் தெரிவித்திருந்தார்.