யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் அது சண்டையாக மாறியது.
மோதல் தொடர்பான ஆரம்ப விசாரணையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேர் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளுக்குள் மாணவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.