டொலரின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மருந்துகளின் விலையை மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதன்படி டொலரின் விலையுடன் ஒப்பிடுகையில் மருந்துப் பொருட்களின் விலை குறைந்தது 15% குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சு, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந்த நோக்கத்திற்காக கலந்து கொண்டனர்.
டொலர் ஒன்றின் பெறுமதியான 190.00 ரூபா 370.00 ரூபாவை ஒப்பிடுகையில் மருந்தின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு போன்ற காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் உள்ள அப்பாவி மக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதனடிப்படையில், இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் மற்றும் விலைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவசரமாக முடிவெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், சர்வதேச மட்டத்தில் ஆய்வுகூடம் ஒன்றை இந்த நாட்டில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்த தேசிய மருந்து தரக் காப்பீட்டு ஆய்வகத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்துவது அல்லது புதிய ஆய்வகத்தை உருவாக்குவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேவையான வேலைத்திட்டங்களை உருவாக்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவொன்று கலந்துகொண்டது.