அண்மையில் குருநாகல் பிரதேசத்தில் பதிவாகிய சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் அது பொய்யான அறிக்கையினால் ஏற்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குருநாகல் – யந்தம்பொல பிரதேசத்தில் உள்ள தனியார் குத்தகை நிறுவனமொன்றில் மனநலம் குன்றிய 14 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
14 வயதுடைய குழந்தை காத்தான்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும், அதன் போது பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் தெரியாத வகையில் குருநாகல் பகுதிக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் வாங்கும் போர்வையில் குத்தகை நிறுவனத்திற்கு வந்த இளைஞர், அதனை விற்க மறுத்ததால், அந்த நிறுவனத்தில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
அதனையடுத்து, நிறுவனத்திற்கு வெளியே பொதுமக்கள் கூடியதால் பதற்றமான சூழல் நிலவியதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரும் குவிக்கப்பட்டதாகவும், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுவது பொய்யானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.