நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மற்றும் மருந்துப் பிரயோகத்தின் பின்னர் 10 பேருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளர்களின் கண்களில் பயன்படுத்தப்படும் மருந்துகள், அதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நோயாளிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சிடம் கேட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான பாரதூரமான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உடனடியாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நோயாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 5ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சைகளின் பின்னர் கண்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் விஷம் கலந்ததன் காரணமாக அவர்களின் பார்வை முற்றாக இழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.
நுவரெலியா மருத்துவமனையின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்குப் பின் வீடுகளுக்குச் சென்ற நோயாளர்கள் சில நாட்களுக்குப் பின்னர் பார்வையை முற்றாக இழந்துவிட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சையின் பின்னர் அவர்களின் நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.