இலங்கை தொடர்பான வெளிநாட்டு சதியின் பின்னணியில் வெளிநாட்டு சதிகாரர் ஜூலி சங் என்றால் உள்ளுர் சதிகாரராக விமல் வீரவன்ச இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள் அது வெறும் அன்பான திட்டல்களே. இருவரும் சதிகாரர்கள் தான் என ஜோன்ஸ்டன் தெரிவித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் விமல் வீரவன்ச ‘பொருளாதார கொலையாளி’ ( ‘ආර්ථික ඝාතකයා’ ) என்ற புத்தகத்தை வெளியிட்டு இந்த சதியை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
அந்த புத்தகத்தின் மூலம் வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியினருக்கும் தகவல்களை வழங்க விமல் வீரவன்ச செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் பதவியை வகித்து வந்த மஹிந்த ராஜபக்சவை அதிலிருந்து விலகுமாறு முதலில் கூறியது வெளியாட்களால் அல்ல, உள்ளே இருக்கும் எதிரிகளால் என அவர் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.