ஐக்கிய மக்கள் சக்தி குற்றப்பத்திரிகை வழங்க வேண்டியது தனக்கு அல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கே என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை அரசாங்கம் கோர வேண்டும் என அறிவித்துவிட்டு அதற்கு வாக்களிக்காததுதான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன. எதிராக 25 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார். அந்தப் பிரேரணைக்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்த ஒரு பின்னணியில் இது அமைந்தது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.