விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், விவசாயத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கும் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பெருந்தோட்ட சீர்திருத்தக் குழுவின் (PRC) உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
காணிப்பிரச்சினை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், தற்போது தீர்க்கப்பட்டு வரும் மகாவலி காணிப்பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தோட்டக் கம்பனிகளின் செயற்பாடுகளும் இங்கு ஆராயப்பட்டன. அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் குத்தகைக் காலம் முடிவடைவதே உள்ளுர் தோட்டக்காரர்கள் எதிர்நோக்கும் பிரதான சவாலாக உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய நவீனமயமாக்கலுக்கு அரசாங்கம் முன்னோக்கிச் சென்றால், தோட்டக் கம்பனிகளுக்கு புதிய குத்தகை வழங்கப்பட வேண்டும் என்றார்.
எவ்வாறாயினும், அனைத்து நிறுவனங்களின் செயற்பாடுகளும் உகந்த மட்டத்தில் இல்லாததால், புதிய குத்தகைகளை வழங்குவதற்கான அடிப்படையை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட சீர்திருத்தக் குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.