இலாபம் ஈட்டாத அரச நிறுவனங்கள் சீர்திருத்தப்பட வேண்டிய போதிலும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களைக் கூட விற்பனை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல நிலமாக மாற்றியுள்ளதாக அங்கு அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
“கடைசி நேரத்தில் IMF திட்டத்திற்குச் சென்றதில், மக்கள் தரப்பிலிருந்து நாட்டுக்கான சிறந்த ஒப்பந்தத்தைப் பெற அரசாங்கம் தவறிவிட்டது. இலாபம் ஈட்டாத பொது நிறுவனங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
திவாலான நாட்டிற்கு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை பராமரிக்கும் திறன் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளால் நாட்டின் வளங்களை பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் உலக முதலாளிகளின் ஏல பூமியாக எமது நாடு மாறியுள்ளது.
இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இங்கு அரசாங்கம் சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்வேறு மாதிரிகளைப் பின்பற்றி நம் நாட்டிலேயே ஒரு மாதிரியைத் தயாரிக்க வேண்டும். இலாபமில்லாத நிறுவனங்களை இலாபம் ஈட்டுவதற்கும், இலாபகரமான நிறுவனங்களை அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும்..”