தேசிய சம்பள ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
குறித்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படாது என்றும் இன்றுடன் அதன் செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சந்திராணி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சம்பள ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நிறுவன பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சு திணைக்களங்களுக்கு உட்பட்ட சேவை யாப்பு ஆட்சேர்பு முறைமை சம்பள மற்றும் கொடுப்பனவுகளுக்கமைவான செயற்பாடுகள் பொது நிர்வாக அமைச்சின் நிறுவக பணிப்பாளர் நாயகத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சு திணைக்களம் மற்றும் மாகாண சபை ஊழியர் எண்ணிக்கை தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கூட்டுத்தாபனம் அரசியலமைப்பு சபைகளுக்கமைவான சேவையாளர் எண்ணிக்கை போன்ற பணிகள் முகாமைத்துவ சேவையாளர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.