ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களது மனைவிகளுக்கு (விதவைகள்) ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகை சுமார் 15 கோடி ரூபாய்.
அந்த அறிக்கையின்படி, ஓய்வூதியம் பெறும் முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் இருபத்திமூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓய்வூதியம் பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றிய ஐந்து தேரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாவல மேதானந்தா, உடுவே தம்மாலோக, கொட்டோபொல அமரகீர்த்தி, அக்மீமன தயாரத்ன, மற்றும் அபரக்கே புக்னானந்தா ஆகியோரே அவர்கள் ஆவர்.
ஓய்வூதியம் பெறும் முன்னாள் உறுப்பினர்களில் கலைஞர்களின் எண்ணிக்கை 4 ஆகும். அந்த நால்வர் மாலனி பொன்சேகா, ஜீவன் குமாரதுங்க, உபேக்ஷா ஸ்வர்ணமாலி மற்றும் ரஞ்சன் ராமநாயக்க.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓய்வூதியம் பெறுகின்றனர். அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜயசூரிய அந்த இருவர்.
அரசியல், சமயம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிஞரும், தொடர்பாளருமான ஜே.ஆர்.பி.சூரியப்பெரும, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியதோடு, ஓய்வூதியத்துக்கும் தகுதியானவர்.
பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியம் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காக (ரூ. 54,000) அதாவது ரூ.18,095 மற்றும் கொடுப்பனவு ரூ.25,000 ஆகும். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் ஓய்வூதியம் 43,095 ரூபாவாகும். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்துடன் 25,000 ரூபா கொடுப்பனவு சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.