தேர்தலுக்கு பணம் வழங்காத நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு சட்டத்தரணி ஊடாக பதிவுத் தபாலில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை 2023 மார்ச் 14 ஆம் திகதி முதல் தவணை முறையில் வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி அறிவித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2023 பெப்ரவரி 13 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் தேவையான பணத்தை வழங்க முடியாது எனவும், அமைச்சரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் பதில் கடிதம் மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது நிதியமைச்சின் செயலாளர், பணத்தை மட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை தீர்மானம் மற்றும் ஒரே நேரத்தில் பணத்தை வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, நிதியமைச்சின் செயலாளர் உச்ச நீதிமன்றத்தை அவமதித்து, அரசியல் சாசனத்தின் 105வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்திருப்பதால், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.