முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் (சிச்சி) கடனட்டையிலிருந்து சுமார் 400 டொலர்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் நேற்று (09) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அறிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் கிரெடிட் கார்டில் இருந்து நான்கு தடவைகளில் ஆன்லைன் பரிமாற்றம் மூலம் 387 டொலர்கள் அதாவது ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா இலங்கை நாணயம் திருடப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இல. 117, விஜேராம மாவத்தை, கொழும்பு 07 இல் வசிக்கும் ரோஹித சந்தன ராஜபக்ஷ என்பவரால் நாரஹேன்பிட்டி பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த 3ஆம் திகதி கோட்டே, 184 தூவ வீதியில் உள்ள தனது வீட்டை விட்டு மாத்தறை வீட்டிற்குச் சென்றதாகவும், அதற்குள் சம்பத் வங்கியின் கடன் அட்டை விழுந்துள்ளதாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இது இலங்கை குற்றவியல் சட்டத்தின் 386வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பொலிஸார், சம்பத் வங்கியின் தலைமையக முகாமையாளருக்கு உரிய வங்கிக் கணக்கு பதிவேடுகளை வரவழைக்குமாறு உத்தரவிடுமாறும் கோரியுள்ளனர்.