இலங்கையை ஆண்டு முழுவதும் சுற்றுலாத் தலமாக மாற்றி சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் யோசனைகளை கலந்துரையாடும் நோக்கில் “சுற்றுலாத்துறையில் உயிர்வாழ்தல் மற்றும் சவால்களை சமாளித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
அண்மைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக சுற்றுலாத்துறையில் பணிபுரிபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிட்ட போதிலும் அதனை மாற்றியமைக்கும் வகையில் சுற்றுலா வர்த்தகத்தை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கும், நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை நடைமுறைப்படுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை தொடர்பில் சிறந்த விளம்பரம் உலகிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இவ்வருட சுதந்திர வைபவம் பெருமையுடன் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் இருந்து விலகியிருந்து அவர்களை இலங்கைக்கு அழைத்து வர இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதை உலகுக்கு காட்ட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் பாதயாத்திரையாக ஹிக்கடுவ நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.