சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத கையடக்கத் தொலைபேசி இறக்குமதிகளினால் நாடு பெருமளவு வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கையடக்கத் தொலைபேசிகளினதும் IMEI இலக்கங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தொலைபேசிகள் தவறாக பயன்படுத்தப்பட்டாலோ அல்லது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலோ இந்த இலக்கத்தை பயன்படுத்தி குறித்த தொலைபேசிகளை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் தொலைபேசிகள் அவ்வாறு பதிவு செய்யப்படுவதில்லை என்பது இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை ஆராய்ந்த இராஜாங்க அமைச்சர், இது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக்குமாறு சுங்கத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.