Homeஉள்ளூர்2025 க்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் வரவேற்பு

2025 க்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் வரவேற்பு

ஜனாதிபதியும், நீதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் வரவேற்பு வெளியிட்டுள்ளனர்.

நுரூலு இனால் செவ்வாய்க்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவு, செலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர்கள், இதுவரைகால சவால்கள் மற்றும் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் எதிர்வுகூறப்பட்டிருந்த மதிப்பீடுகள் பலராலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், இலங்கையினால் எத்தகைய சவால்களையும் தாண்டி இலக்கினை அடையமுடியும் எனும் விடயம் நிரூபிக்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அதேபோன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள எதிர்வுகூறல்களும் நடைமுறைக்குச் சாத்தியமானவையாக அமையும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

அதேவேளை ‘2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் நாட்டுக்கு சிறந்ததாகக் காணப்படுவதுடன் சரியான பாதையில் பயணிக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசாங்க மாற்றங்கள், கொள்கைகள் அடிக்கடி மாற்றமடைவதற்கு வழிகோலின. இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் அரசியல் முதிர்ச்சியின் காரணமாக 2025 இல் அவ்வாறான நிலை ஏற்படாது’ என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டமானது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியமான நுண்பாகப்பொருளாதார அடிப்படைகளைத் தொடர்ந்து பேணுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அத்தோடு நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கத்தினால் மாத்திரம் அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லமுடியாது எனக் குறிப்பிட்ட அவர், ‘ஏற்றுமதி மேம்பாடு, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பன உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் விரிவாக்கத்துக்கு தனியார்துறையின் பங்களிப்பு மிக அவசியமானதாகும்’ என வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular