இலங்கை முதலீட்டு சபையின் எதிர்காலத் திட்டங்கள், செயற்பாடுகள், இனங்காணப்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படும் துறைகள் தொடர்பிலான முன்வைப்பு (Presentation) இலங்கையின் வணிகத் தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை முதலீட்டு சபை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, வனப்பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுலா அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நீதி அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட பல துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதற்கமைய, இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் காணப்படும் பிரயோக ரீதியான சிக்கல்கள் குறித்துக் கலந்துரையாடியதுடன், அது தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதேபோன்று, வியட்னாம், மலேசியா போன்ற நாடுகளில் முதலீடுகள் உயர்ந்த அளவில் காணப்படுதல் மற்றும் அந்த நிலைக்கு இலங்கையை அடையச் செய்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்நாட்டில் காணப்படும் கனிய வளங்களைச் சரியாக அகழ்வு செய்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்வதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
முதலீடுகளுக்காக வருகை தரும் பல்வேறு தரப்பினர்களுக்கும் தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு இடத்தை ஸ்தாபித்தல் மற்றும் அந்த அனுமதிகளுக்காக எடுக்கும் காலத்தை குறித்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அந்தந்தத் துறைகளுக்கிடையில் சரியான தொடர்பாடலுடன் செயற்படுவதன் மூலம் இந்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.