தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போன்று இருபது ஓவர் லீக் போட்டிகள் இம்மாதம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது உலகளவில் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகளவில் இலாபம் ஈட்டுபவையாக இருக்கின்றன.
இந்தியாவின் ஐபிஎல் தொடரை முன்மாதிரிக் கொண்டு இலங்கை, மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளிலும் ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், பல நாடுகளில் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் ஆணையமானது, எஸ்ஏ 20 (SA -20) என்ற பெயரில் நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இத்தொடரில், எம்ஐ கேப் டவுன், பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பிரிட்டோரியா கேபிடல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் எஸ்ஏ 20 தொடரில் கலந்து கொள்கின்றன.
இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தொடக்க பிரிவில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை மோதும். அதன்பின்னர் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இத்தொடரின் போட்டிகள் கேப் டவுன், டர்பன், ஜிபெர்ஹா, பார்ல், செஞ்சுரியன், ஜோஹன்னஸ்பர்க் உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெறுகின்றன.
இந்திய நேரப்படி மாலை 5, இரவு 9 மணிக்கு ஆட்டங்கள் நடைபெறும். பிப்ரவரி 8-இல் ஜோஹன்னஸ்பர்க்கில் முதல் அரையிறுதியும், 9-இல் செஞ்சுரியனில் இரண்டாம் அரையிறுதியும், பிப்ரவரி 11-இல் ஜோஹன்னஸ்பர்க்கில் இறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.