அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களிடமிருந்து இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது. அந்த கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்
மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதற்கெதிராக சட்ட ரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் பேரவையினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சார சபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்கு அமைச்சரிடம் காணப்படும் ஒரேயொரு மாற்று வழி கட்டணத்தை அதிகரிப்பது மாத்திரமேயாகும். இதன் மூலம் மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை சுமத்துவதே இவர்களின் நோக்கமாகும்.
அண்மையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் தற்போது 10 சதவீதம் மின்சார பாவனையை குறைத்துக் கொண்டுள்ளனர். அது மாத்திரமின்றி 16 சதவீதமான தொழிற்துறைகள் இதன் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் எதனைப் பற்றியும் கவனத்தில் கொள்ளாத அமைச்சர் மக்கள் மீது சுமைகளை சுமத்தியேனும் மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுசெய்யவே முயற்சிக்கின்றார்.
இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். இவ்வாறு கட்டணத்தை செலுத்தாமலிருப்பது வறுமையிலுள்ள மக்கள் அல்ல. முன்னாள் அமைச்சர்கள் , தற்போதைய அமைச்சர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.
அதே போன்று அரசாங்கத்தின் சகாக்களின் நிறுவனங்களும் , அரச நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு 39 பில்லியன் ரூபா மின் கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது, மக்களின் சுமைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் நியாயமானதா?
மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி குறித்த வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியேனும் அமைச்சர் சிந்தித்திருக்கின்றாறா? எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பவற்றைப் பயன்படுத்தி மாத்திரம் மின் உற்பத்தியில் ஈடுபட எதிர்பார்த்துள்ளமையின் நோக்கம் , தமக்கு கிடைக்கப் பெறும் தரகுப்பணம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் பரிந்துரையும் இன்றி அமைச்சரின் தன்னிச்சையான விருப்பத்திற்கு அவ்வாறு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. மாறாக அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளை இதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.