சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பதிவு, அனுமதிப்பத்திரம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் மனுஷ நாணயக்கார காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு ஆலோசனை வழங்கினார்.
இவர்கள் பல்வேறு பொருட்களை விற்பது முதல் போதைப்பொருள் விற்பனை வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், சொந்த நாட்டு நாணயத்தை எடுத்துக்கொண்டு திரும்புவதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படாததால் பொலிஸார் செய்வதறியாது திண்டாடுவதாகவும் இதன் காரணமாக காலி உள்ளிட்ட உள்ளுர் சுற்றுலாப் பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு தொழில் முனைவோர் திட்டங்களின் மூலம் நெருக்கடியில் இருக்கும் 19,000 குடும்பங்களுக்கு வலுவூட்டும் அதே வேளையில், தொழில் முயற்சியில் ஈடுபடாத இளைஞர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கியதன் பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியச் செய்ய முடியும்.
இந்த 19,000 குடும்பங்களை மாவட்ட செயலாளரால் உரிய முறையில் இலக்கு வைத்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்ப முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.