ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டிய தேவை சட்ட ரீதியில் வெளிப்பட்டு இருக்கின்றது. என்றாலும் இந்த தேர்தலை பிற்போடுவதற்காக பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் தற்போதுவரைக்கும் கையாளப்பட்டு வருகின்றன. எந்த நிலைமையிலும் சரி தேர்தலை நடத்தியாகவேண்டி இருக்கின்றது. இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நேரடி தீர்வாக இல்லாவிட்டாலும் ஜனநாயக வரைப்புக்குள் உரிய காலத்துக்கு சட்ட ரீதியில் தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.
அத்துடன் சட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் 19ஆம் திகதி ஆகும்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, நியமிக்கப்படவேண்டும். அதனால் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் அறிவிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
இதேவேளை, தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாட அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நேற்று கொழும்புக்கு அழைத்திருப்பதாக தெரியவருகின்றது.