ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் வந்து பின்னர் இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட டயானா கமகேயின் அரசியல் இருப்பு தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு அரசியல் அமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் ஊடாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, டயானா கமகேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கைப் பிரஜை அல்ல என முறைப்பாட்டாளர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத போதிலும், டயானாவுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நம்புகின்றது.
இந்நிலையில் டயானாவின் இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து பெண் பிரதிநிதி ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வாய்ப்பை ஏற்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.மக்கள் ஆசியுடனேயே தான் சபைக்கு வருவேன் எனக் கூறியுள்ளார்.
எனவே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவை தேசியப் பட்டியல் ஊடாக சபைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.